சிறார் ஆபாசப்படம் பார்த்ததாக சென்னையில் ஒருவர் கைது
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: சிறார் ஆபாசப்படம் - சென்னையில் ஒருவர் கைது
சென்னையில் 2 ஆண்டுகளாக குழந்தைகள் ஆபாசப்படம் பார்த்ததாக அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞரை ஐபி முகவரியை வைத்து போலீஸார் கைது செய்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதுதொடர்பான சம்பவங்களில் ஈடுபடுவோரை கைதுசெய்யும் பணியில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சிறார் ஆபாச வலைதளங்களை பார்ப்பவர்கள் குறித்து ஐபி அட்ரஸ்களை வைத்து போலீஸார் சோதனையிட்டு வந்தபோது அம்பத்தூரை சேர்ந்த ஹரீஷ் (24) என்கிற இளைஞர் கடந்த 2018- ஆகஸ்டு மாதம் முதல் தற்போது கைது செய்யப்படும்வரை சிறார் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் அனுப்பிய ஐபி அட்ரஸ் அடிப்படையில் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஹரீஷை புதன்கிழமை மதியம் கைது செய்தனர். ஹரீஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார். அவர் மீது ஐடி ஆக்ட் 67(பி), 14(1) போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.