1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2020 (18:47 IST)

ஹைட்ரோகார்பன் திட்டம்: மத்திய அரசை எதிர்த்து திமுக டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும், எதிர்ப்புகளும் இருந்து வந்த நிலையில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான பணிகள் 2018ல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
 
ஹைட்ரோகார்பன்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த அனுமதியும் பெற வேண்டிய அவசியத்தை நீக்கும் வகையில், அவற்றை 'ஏ' பிரிவிலிருந்து 'பி2' பிரிவுக்கு மாற்றி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
 
இதனால், ஆய்வுக் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையோ, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டமோ நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் அனுமதியே போதுமானது.
 
மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது.
 
”காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்”, ”மாநிலஅரசு அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இதில் திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் ஒன்றான நாகை மாவட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
 
இந்த போராட்டத்தில் விளைநிலங்களை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
 
இத்திட்டத்தினை திரும்பப் பெறும்வரை பல்வேறு வடிவங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என திமுகவினர் தெரிவித்தனர்.
 
மேலும் கடற்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் தஞ்சாவூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பாகவும், புதுக்கோட்டையில் திலகர் திடலிலும், கடலூரில் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் அருகிலும், நாகையில் அவரி திடலிலும், திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.