ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:00 IST)

எஸ்.என்.சுக்லா மீது ஊழல் வழக்கு - இந்திய வரலாற்றில் இரண்டாம் முறை

இந்திய வரலாற்றில் இரண்டாம் முறையாக பணியில் இருக்கும் நீதிபதி ஒருவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.

ஊழல் வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சி.பி.ஐ விடுத்த வேண்டுகோளுக்கு இசைவு தெரிவித்துள்ளார் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவுறுத்தலின்பேரில் சுக்லா மற்றும் பிறர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணைகளுக்கு பிறகு, நீதிபதி சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருந்தது.

முதல்கட்ட விசாரணை விவரங்கள் மற்றும் ஊழல் வழக்கு தொடர்பான காலவரிசை தகவல்கள் ஆகியவற்றை சிபிஐ தலைமை நீதிபதியிடம் வழங்கி இருந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

சுக்லா மீதான குற்றச்சாட்டு என்ன?

தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை 2017-18 கல்வியாண்டில், உச்ச நீதிமன்ற ஆணை மற்றும் ஏற்கனவே அமலில் இருந்த விதிமுறைகள் ஆகியவற்றை மீறி நீட்டித்ததாக சுக்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

1991 ஜூலை மாதம் வரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி இருக்கவில்லை.

1976ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த கே.வீராசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீது வழக்குதொடர முடியாது என்று வீராசாமி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அதை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் என்று ஜூலை 25, 1991 அன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளில் முதல் முறையாக சுக்லா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உச்ச நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம்

இது குறித்து பிபிசியிடம் பேசிய சட்ட வல்லுநரும் இந்திய அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞருமான கே.சி.கௌசிக், இது ஒட்டுமொத்த நீதித்துறைக்கே ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார்."குற்றம் நிரூபணமானால் சுக்லா முறையாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்," என்று தெரிவித்தார் கௌசிக். இந்திய அரசுக்கு சுக்லாவை பதவிநீக்கம் செய்ய அதிகாரம் இல்லை என்பதால் நாடாளுமன்ற நடவடிக்கை மூலமே அவரை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறார் கௌசிக். இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் நீதிபதி ஒருவர் நாடாளுமன்றம் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டதில்லை.