அமர்நாத் யாத்ரிகர்கள் உடனே வெளியேற காஷ்மீர் அரசு உத்தரவு: "பயங்கரவாத அச்சுறுத்தல் காரணம்"
அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்திய ராணுவத்தின் பொதுக் கட்டளை அதிகாரி கே.ஜே.எஸ்.தில்லான் இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகாலத் தலைமையகமான ஸ்ரீநகரில் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில் காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆட்கொல்லி நிலக் கண்ணி வெடியும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரைஃபிள் துப்பாக்கியும் அமர்நாத் பயணத் தடத்தில் இந்தியப் படையால் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஐ.இ.டி. எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு, டெலஸ்கோப் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் பாதையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எம் 24 வகை ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றும் செய்தியாளர் சந்திப்பில் காட்டப்பட்டது.