ஆண்கள் துணையின்றி சௌதி பெண்கள் தனியே பயணிக்க அனுமதி!

Last Updated: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:56 IST)
ஆண் பாதுகாவலரின் துணையின்றி பெண்கள் வெளிநாடு பயணிப்பதற்கு சௌதி அரேபியாவில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண் பாதுகாவலரின் அனுமதியின்றி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இன்று (வெள்ளிக்கிழமை) சௌதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சௌதி அரேபியாவின் ஆண்களை போன்றே பெண்களும் எவ்வித வேறுபாடுமின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சௌதி அரேபிய பெண்கள் தங்களது திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் விவாகரத்தை பதிவு செய்யும் உரிமையும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அரசாணையில் மூலம், அந்நாட்டில் பணியிடத்தில் பெண்களுக்கான வாய்ப்புகளை அளிப்பது தொடர்பான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், சௌதி அரேபியாவை சேர்ந்த அனைவரும் பாலினம், வயது, மாற்றுத்திறன் உள்ளிட்ட எவ்வித வேறுபாடுமின்றி பணிவாய்ப்புகளை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவை பொறுத்தவரை, ஒரு பெண் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலோ அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்றாலோ தனது தந்தை அல்லது பாதுகாவலர் அல்லது உறவினர் ஒருவரது அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
சௌதி அரேபியாவை காலத்திற்கேற்றவாறு மேம்படுத்தும் நோக்கில் பெண்களை கார் ஓட்ட அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் செயல்படுத்தி வருகிறார்.
 
இதுதொடர்பாக, 2016 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட தொலைநோக்கு திட்டத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை 22 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்துதல் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.
 
இருப்பினும், சௌதி அரேபியாவை சேர்ந்த பெண்கள் தாங்கள் பாலின அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுத்தாக தெரிவித்து கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் கோரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
இந்தாண்டின் தொடக்கத்தில், தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட சௌதி பெண்ணுக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் கனடா தஞ்சம் அளித்தது.
 
சௌதி அரேபியாவில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவ்வப்போது குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதில் மேலும் படிக்கவும் :