ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (19:08 IST)

ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?

6 planets in a line
நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த 6 கோள்கள் வருகின்ற ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வானில் தெரியும் என்றும், அவற்றை யார் வேண்டுமானாலும் நேரடியாகப் பார்க்க முடியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6 planets in a line


நாம் வாழும் இந்த பூமி எவ்வளவு ஆச்சரியங்களையும், அதிசயத்தையும் வைத்திருக்கிறதோ, அதே அளவு விண்வெளியும் பெரும் ரகசியங்களைத் தன்னுள்ளே வைத்துள்ளது.

அந்த ஆச்சரியமூட்டும் அதிசயங்களை, அவ்வப்போது ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் நமக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது.

அப்படி வருகின்ற ஜூன் 3, 4 ஆகிய இரண்டு நாட்களில் அதிகாலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பு நிலவோடு சேர்த்து சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புதன், வியாழன், சனி, நெப்டியூன், செவ்வாய், யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் வானத்தில் தோன்றும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு சில கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் எனவும், ஒரு சில கோள்களைப் பெரிய தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வான்வெளியில் என்ன நடக்கிறது?

எதனால் இந்த நிகழ்வு நடக்கிறது, இது ஒரு அரிய நிகழ்வா என்ற கேள்விகளை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தின் இயக்குநர் லெனின் தமிழ்க்கோவனிடம் முன்வைத்தோம்.

இந்நிகழ்வு குறித்து விளக்கிய அவர், “இது அவ்வப்போது நடக்கும் ஒரு நிகழ்வுதான். சுற்றுப்பாதையில் சுற்றி வரும் 8 கோள்களும் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் சுழற்சியின் ஒரு கட்டத்தில் அனைத்துக் கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வே இது," என்றார்.

“இப்படியான நிகழ்வின்போது குறிப்பிட்ட எல்லா கோள்களையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு அமையும்.”

விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், “ஒரு மைதானத்தில் நடக்கும் ஓட்டப் பந்தயத்தை நடுவில் இருந்து நீங்கள் பார்க்கும்போது ஓட்டப்பந்தய வீரர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் ஓடிவரும் வேகத்திற்கு ஏற்ப வெவ்வேறு திசைகளில் பார்க்க முடியும். ஆனால் ஏதோவொரு புள்ளியில் ஒரு சிலர் மட்டும் ஒரே நேர்க்கோட்டில் தெரிவார்கள். அதுபோன்ற நிகழ்வுதான் இதுவும்,” என்று விளக்குகிறார்.

எப்போது இந்த நிகழ்வு நடைபெறுகிறது?

ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதி நடக்கவுள்ள இந்த நிகழ்வின்போது, நிலா உள்பட மேற்கூறிய 6 கோள்களும் சூரிய உதயத்திற்கு முன்பு வானில் தெரிய உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

மேலும், “இவை ஜூன் 1ஆம் தேதியில் தொடங்கி 4ஆம் தேதி வரை, வானில் கிழக்கு திசையில், சூரியன் உதிப்பதற்கு முன்பு உலகில் உள்ள அனைத்துப் பகுதி மக்களின் கண்களுக்கும் தெரியும்” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

மக்கள் எந்தெந்த கோள்களைப் பார்க்க முடியும்?

என்னதான் நிலா மற்றும் 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வந்து காட்சியளித்தாலும், எல்லா கோள்களையும் மனிதர்களால் நேரடியாகப் பார்த்துவிட முடியாது. சூரிய உதயத்தைப் பொறுத்தே அது சாத்தியப்படும் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன்.

“அடிவானத்தில் தோன்றும் இந்தக் கோள்களை மேடான இடத்தில் நின்று பார்க்கலாம். ஆனால், தற்போது பருவகாலம் என்பதாலும் இவற்றைப் பார்ப்பதில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக” கூறுகிறார் அவர்.

சூரிய ஒளியின் வெளிச்சம் வந்துவிட்டாலும் இந்தக் கோள்கள் தெரியாமல் போக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் அவர்.

மேலும், இவற்றில் “புதன் கோள் சூரியனுடன் சுற்றிக் கொண்டிருக்கும் என்பதால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் 300 கோடி கி.மீ. தொலைவில் இருப்பதால், அவற்றை மிகப்பெரிய தொலைநோக்கிகள் கொண்டு மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்ணுக்கோ அல்லது பைனாகுலருக்கோ தெரியாது” என்கிறார் அவர்.

இதே கருத்தை முன்வைத்த வெங்கடேஸ்வரன், “வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகிய கோள்களை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்” என்கிறார்.

எங்கிருந்து இந்த கோள்களைப் பார்க்கலாம்?

மேற்கூறிய கோள்கள் கண்ணுக்குத் தெரிவது சூரிய வெளிச்சம் மற்றும் மேகங்களின் நிலையைப் பொறுத்து மாறலாம்.

இருப்பினும், இவற்றைப் பார்க்க விரும்புபவர்கள் குடியிருப்புப் பகுதிகளில் இருந்துகொண்டு இவற்றைப் பார்ப்பது கடினம். மாறாக கடற்கரை, உயரமான மலைகள் அல்லது எந்த கட்டடமும் அருகில் இல்லாத பெரிய கட்டடங்களில் இருந்து இவற்றை நேரடியாகப் பார்க்கலாம் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.

இது ஒரு அரிய நிகழ்வா?

இந்த நிகழ்வை அரிதாக நிகழும் ஒன்று எனக் கூற முடியாது என்றாலும், ஒரே வரிசையில் 6 கோள்களை நேரடியாகப் பார்க்க முடிகிற நிகழ்வு என்பதால் இது கவனம் பெறுகிறது என்று கூறுகிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

மேலும் இது அடிக்கடி நிகழ்வதுதான் என்கிறார் லெனின் தமிழ்க்கோவன்.

அவர் கூறுகையில், “இதற்கடுத்து வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடைபெறும். அதற்கடுத்து 2025ஆம் ஆண்டும் இதே போன்ற நிகழ்வு ஏற்படும். அப்படியே வருகின்ற காலத்தில் அடிக்கடி இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கலாம்” என்கிறார் அவர்.

அறிவியல் மையத்தின் ஏற்பாடுகள் உண்டா?

பொதுவாகவே இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மற்றும் இதர அறிவியல் அமைப்புகள் அந்த நிகழ்வைப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்வார்கள்.

ஆனால், இந்த நிகழ்விற்கு அப்படி எதுவும் ஏற்பாடு இல்லை என்று தெரிவித்தார் லெனின் தமிழ்க்கோவன்.

அதற்குக் காரணம், “இது மிகக் குறுகிய நேரமே நடக்கும் நிகழ்வு என்பதாலும், சூரிய வெளிச்சத்தைப் பொறுத்தே இந்தக் கோள்களைப் பார்க்க இயலும் என்பதாலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஆனால், மக்கள் தாங்களே நேரடியாக இதைப் பார்த்துக் கொள்ளலாம்,” என்றார் அவர்.

Edit by Prasanth.K