வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (10:56 IST)

10 ஆண்டுகளில் 320 விமான விபத்துகள்: 100 ஆண்டுகள் பழமையான போயிங் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?

132 பேருடன் பயணித்த சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் மார்ச் 21 திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானத்தில் பயணித்தோரின் உறவினர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
 
இதுவரை விமானத்தின் பாகங்கள் மட்டுமே சில கிடைத்துள்ளன. மேலும், பயணிகளின் சேதமடைந்த உடைமைகள், அடையாள அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இந்த விபத்து சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான முழு விசாரணைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
 
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, விபத்திற்குள்ளான விமானத்தைத் தயாரித்த போயிங் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.சீனாவில் நடந்த விபத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம், போயிங் 737 விமானங்களை மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளது.
 
விமான நடைமுறைகள், விமான தகுதி மற்றும் செயல்பாடுகளைக் கண்காணிக்க குழுக்களை அனுப்பியுள்ளதாக ஒழுங்குமுறை நிறுவனம் கூறியது.
 
குன்மிங்கில் இருந்து குவாங்சிக்கு சென்று கொண்டிருந்த விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது. அந்த விபத்தைத் தொடர்ந்து, சீன ஈஸ்டர் ஏர்லைன்ஸ் அதன் அனைத்து 737-800 ரக விமானங்களையும் நிறுத்தியுள்ளது.
 
"விமானப் பாதுகாப்பு ஒரு தீவிரமான வணிகம். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறோம்," என்று இந்திய சிவில் அசோசியேஷன் தலைமை இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் கூறியுள்ளார்.
 
மேலும், "இடைக்காலமாக, எங்கள் 737 விமானங்கள் மேம்பட்ட கண்காணிப்பில் கவனம் செலுத்துகிறோம்," என்றார்.
இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய அனைத்துமே போயிங் 737 ரக விமானங்களைக் கொண்டுள்ளன.
 
அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், சீனாவில் விசாரணைகளுக்கு உதவுவதாகவும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் தொடர்பு கொள்வதாகவும் கூறியுள்ளது.
 
100 ஆண்டுகள் பழமையான போயிங் நிறுவனம்
போயிங் நிறுவனம் 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மர வியாபாரி வில்லியம்.இ.போயிங் என்பவரால் விமான உற்பத்திக்காக ஜூலை 1916-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
 
அவரும் அமெரிக்க கடற்படை அதிகாரி கான்ராட் வெஸ்டர்வெல்ட்டும் இணைந்து பி&டபுள்யூ என்ற ஒற்றை இன்ஜின் மற்றும் இரண்டு இருக்கைகளைக் கொண்ட கடல் விமானத்தை உருவாக்கினார்கள். 1917-ஆம் ஆண்டில் போயிங் விமான நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. முதல் உலகப் போரின்போது வெற்றிகரமாக "பறக்கும் படகுகளை" உருவாக்கினார்கள்.
 
இரண்டாம் உலகப் போரிலும் போயிங் விமான நிறுவனம் தயாரித்த பி-17 விமானம், பி-47 ஸ்டிரேட்டோஜெட் ஆகிய போயிங் நிறுவனத்தின் விமானங்கள் நாஜி படைகளுக்கு எதிரான போரில் பங்கெடுத்தன.
 
இப்படியாக 100 ஆண்டுகள் பழைமையான, முதல் உலகப் போரில் இருந்து தனது விமானங்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. அதற்குக் காரணம் அந்த விமானங்கள் சந்திக்கும் விபத்துகள்தான்.
 
10 ஆண்டுகளில் 320 விபத்துகள்
போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களில், 2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில் உலகம் முழுக்க 320 விமான விபத்துகள் நடந்துள்ளதாக அவர்களுடைய 2020-ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.
 
அந்த பத்து ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் மொத்தமாக 1,752 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி, 1959 முதல் 2020 வரையிலான 61 ஆண்டு காலகட்டத்தில் மொத்தமாக வணிக விமானங்களில் 2,082 விபத்துகள் நடந்துள்ளன.
 
அந்த 2,082 விபத்துகளில் 30,132 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நடந்த விபத்துகளில் மட்டும் 6,206 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
2011 முதல் 2020 வரை நடந்த விபத்துகளில் விமானம் பறக்கத் தொடங்கும்போது நடந்த 2 விபத்துகளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
பயணத்தின் போது நடந்த 5 விபத்துகளில் 519 பேர் உயிரிழந்துள்ளனர். தரையிறங்கும்போது நடந்த 10 விபத்துகளில் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
2020-ஆம் ஆண்டில் மட்டும் போயிங் நிறுவனம் தயாரித்த விமானங்களில் 17 விபத்துகள் நடந்துள்ளன. அதில் மொத்தமாக 121 உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
 
போயிங் விமானத்தில் நிகழ்ந்த விபத்துகள்
2020-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதியன்று இஸ்தான்புல் அருகே பெகாசஸ் விமானம் விபத்திற்குள்ளானதில், போயிங் 737-800 ரக விமானம் முற்றிலுமாகச் சேதமடைந்தது. அதில் பயணித்த 183 பேரில் 3 பேர் உயிரிழந்தனர்.
 
2020-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதியன்று கராச்சியில் நடந்த விபத்தின்போது பாகிஸ்தான் இன்டர்நேஷன்ல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ320 ரக விமானம் விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 99 பேரில் 97 பேர் உயிரிழந்தனர்.
 
இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 விமானம் விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 190 பேரில் 21 பேர் உயிரிழந்தனர். 75 பேர் படுகாயம் அடைந்தனர்.
2021-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதியன்று, இந்தோனேசியாவில் ஜகார்தாவில் இருந்து போண்டியானாக் நகரத்திற்கு ஸ்ரீவிஜ்யா ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஜாவா கடலில் விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்தில் 62 பேர் உயிரிழந்தனர்.
 
இப்போது சீனாவில் ஏற்பட்டுள்ள விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுகுறித்து போயிங் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "எங்களுடைய எண்ணங்கள் முழுக்க சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் MU 5735 விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களிடம் உள்ளன. நாங்கள் விமான வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். அவர்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளோம்.
 
அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்துடன் போயிங் தொடர்பில் உள்ளது. எங்களுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் சீனாவின் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளார்கள்," என்று குறிப்பிட்டுள்ளது.