ஜெயலலிதாவை ஏன் மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவில்லை?
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது ? - ஓ. பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்!
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன்.
அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் என்னிடம் சொன்னார். மறுநாள் காலை அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டியை சந்தித்து இதே கருத்தை வலியுறுத்தினேன்.
ஆனால், அப்போது ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என விஜயகுமார் ரெட்டி கூறினார் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும், நான்கு நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் ஆகியோர்கள் தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.