நமக்குன்னு இன்னொரு பூமி இல்ல! – ட்ரெண்டாகும் உலக பூமி தினம்!
உலகம் முழுவதும் கொரோனாவால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையிலும் “உலக பூமி தினம்” இன்று சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புவி வெப்பமயமாதம், மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களை அழித்தல் போன்ற பல சீர்கேடுகளையும் மக்கள் உணர்ந்து கொள்ளவும், பூமியை அதன் சூழலை தொடர்ந்து காப்பதற்காகவும் உலக பூமி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ல் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டாலும் இந்த நாள் உண்மையாக பூமியை மதிக்கும் விதமாக அமைந்துள்ளது. எந்த வித போக்குவரத்து நெரிசல்கள், வாகன புகைகள், தொழிற்சாலை கழிவுகள் என எதுவுமின்றி உண்மையான பூமி நாளாக அமைந்துள்ளது.
மான்களும், ஒட்டகங்களும் ஆளற்ற கடற்கரைகளை சுற்றி வர, பல ஆண்டுகளாக சூழலியல் ஆர்வலர்கள் அழிந்துவிட்டதாக கருதிய விலங்குகளும் கூட சாவகாசமாய் சாலைகளில் சென்று கொண்டிருக்கின்றன. திட்டங்கள் போட்டு, நிதி ஒதுக்கியும் கூட சுத்தம் செய்ய முடியாத ஆறுகளை சில நாட்கள் ஊரடங்கு தூய்மைப்படுத்தியிருக்கிறது. உலகம் முழுவதும் காற்றில் கார்பன் மாசு குறைந்துள்ளதாக ஆய்வகங்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
நமக்கென வாழ்வதற்கு இரண்டாவதாக ஒரு உலகமும் கிடையாது, இரண்டாம் கட்ட திட்டங்களும் கிடையாது என்பதை மக்கள் உணர வேண்டும். தன்னை தானே சுத்தம் செய்து கொண்டுள்ள இந்த பூமியை மீண்டும் மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் இந்த நாளில் உறுதியேற்க சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.