காஸாவின் அவலநிலை பற்றி WHO தலைவர் டெட்ரோஸ் அனாதம் வேதனை
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனஸ்தீசியா கொடுக்கப்படாமல் அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன என்று WHO தலைவர் டெட்ரோஸ் அனாதம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் உறுதியெடுத்து, தொடர்ந்து பாலஸ்தீன காசா முனையில் ஏவுகணை வாயிலாகவும், தரைவழியாகவும், தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பிற்கும் இடையிலான போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் தொடர்ந்து தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 10569 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், காஸாவில் அவல நிலை பற்றி உலக சுகாதார நிறுவன தலைவர் (WHO தலைவர்) டெட்ரோஸ் அனாதம் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
''காஸாவில் அனஸ்தீசியா கொடுக்கப்படாமல் அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் ஐ நா பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.