1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 மார்ச் 2025 (10:06 IST)

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

திருமலையில் உள்ள பாபவிநாசம் பகுதியில் வனத்துறை  படகு சவாரியை அனுமதிக்க தீர்மானித்துள்ள நிலையில் இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

திருமலை மீது ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் உள்ளன, அவற்றில் பாபவிநாசம் மிகவும் முக்கியமானது. தற்போது, வனத்துறை இங்கு படகு சவாரியை அனுமதிக்க தீர்மானித்துள்ளது, இதற்காக நேற்று சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. நீர்த்தேக்கத்தில் பல முறை படகில் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. விரைவில் பொதுமக்களுக்கு படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பாபவிநாசம் பக்தர்களுக்கு புனிதமான நீர்த்தேக்கமாக கருதப்படுகிறது. ஏழுமலையானை தரிசிக்கும் முன் பக்தர்கள் சிலர் இங்கு வந்து புனித நீராடி தரிசனத்திற்கு செல்கின்றனர், இன்னும் சிலர் நீரை எடுத்து தலையில் தெளிக்கின்றனர். இந்த நீரில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என அவர்கள் நம்புகின்றனர்.

இத்தகைய புனித இடத்தில் படகு சவாரி தொடங்கப்படுவது, அதன் புனிதத்தன்மையை பாதிக்கக்கூடும் என்றும், இது சுற்றுலா விடுதியாக மாறிவிடும் என்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது யாத்திரை தளமாக இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, தினமும் திருப்பதிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், படகு சவாரி மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கலாம். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு மேலாய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran