திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (19:09 IST)

சர்வதேச விருதை வென்ற தமிழக பெண்..குவியும் பாராட்டுகள்

helan
அமெரிக்காவில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி    "Ms.International World People's Choice Winner 2022 " என்ற  பட்டம் வென்று அசத்தியுள்ளார். 
 
திருமணம் ஆகி குழந்தைகளுக்கு தாய் ஆன பெண்கள் அழகு துறையில் சாதிக்க முடியுமா ..? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கு சிறந்த  உதாரணமாக திகழ்கிறார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. திருமணமாகி இரு பெண்களுக்கு தாயான பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று சர்வதேச அழகி பட்டம் சூட்டியுள்ளார். சாதிப்பதற்கு வானமே எல்லை என்பதை போல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண நடுத்தர குடும்பத்தில் கோவையில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று தனது சாதனைகளால் இமாலய சிகரத்தின் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.
 
வறுமை துறத்தினாலும் இவரது பயணம் என்றுமே நின்றது இல்லை.
 
மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என பன்முக திறமையால் ஆளுமை கொண்ட  பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சாதனை பயணம் கடல் கடந்தும் இந்தியாவின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளது. 
 
கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில்,  தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  இதோடு பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் வெற்றி நின்று விடவில்லை. தனது திறமையை உலமே அறிந்திட கடல் கடந்து பயணித்தார்.
 
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி  பங்கேற்றார். கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி "Miss International world people's Choice winner 2022" என்ற பட்டத்தை வென்றுள்ளார். 14 வயது முதல் 60 வயது வரையிலான போட்டியாளர்களிடையே நடைபெற்ற போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி முதலிடம் பிடித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு கிடைத்துள்ளது.
 
தன்னுடைய வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ள பிளாரன்ஸ் ஹெலன் நளினி அடுத்ததாக நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார். இன்டர்னேஷ்னல் கிளாமர் புராஜெக்டில் இந்திய தூதுவராக தேர்வாகியுள்ளதாக கூறும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் அவர்களை தேர்வு செய்யும் நடுவராகவும் செயல்படுவதாக கூறியுள்ளார். இதுமட்டிமின்றி, டிரீம் அன்ட் பிலீவ் ஃபவுன்டேஷனுடன் இணைந்து ஆர்.ஐ.டி. கல்வி மற்றும் குழந்தைகளுக்கான கட்டாய கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  விழிப்புணர்வுடன் நிறுத்தி கொள்ளாமல் மாணவர்களின் கல்வி செலவுக்காக உலகம் முழுவதிலும் உள்ள 360 தன்னார்வலர்களிடம்  7 லட்சம் ரூபாய் நிதி வசூலித்து கொடுத்துள்ளார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. உக்ரைன் போர் நெருக்கடிக்காக 250 பேரிடம் இருந்து 4,700 டாலர் அளவுக்கு நிதி வசூலித்து கொடுத்த பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் சேவை நீண்டு கொண்டே செல்கிறது. மிகவும் பின் தங்கிய கிராம புறங்களில் குழந்தைகளுக்கு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன்,  Women empowerment அமைப்பின் All ladies league பிரிவில் தமிழகத்திற்கான தலைவராக உள்ளார். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருக்கும் பெண்கள் முன்னேறுவதற்கான தொழிற்சார்ந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறார். பெண்களால் சாதிக்க முடியும் என்பதால் கிராமப்புற பெண்களுக்கும், பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதே தனது இலக்கு என நெகிழ்ச்சியுடன் பிளாரன்ஸ் ஹெலன் நளினி கூறியுள்ளார்.

Edited By Sinoj