சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!
சென்னையின் மூன்று இடங்களில் விபத்து நடைபெறும் என்று மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெற்கு ரயில்வேயில் இயங்கி வரும் குடோன் கட்டுப்பாட்டாளர் பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு கடந்த 14ஆம் தேதி ஒரு மிரட்டல் இமெயில் வந்தது. அதில், "சென்னையில் உள்ள மூன்று இடங்களில் விபத்து நடக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரயில்வே குடோன் கட்டுப்பாடு அதிகாரி, சென்னை சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 10 பேர் கொண்ட தனிப்படை, மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார் என்பதை குறித்து தீவிர விசாரணை செய்தனர்.
இதுகுறித்து கூகுள் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அனுப்பப்பட்டது. அவர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் கடப்பா சென்று, இமெயில் அனுப்பிய நபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஜெயராமன் (32) என அடையாளம் காணப்பட்டார். மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுத்தது அவர்தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முக்கிய தகவல்களைப் பெற்ற தனிப்படையினரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
Edited by Mahendran