1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (13:58 IST)

டைட்டானிக் கப்பலை பார்க்க சென்றவர்கள் மாயம்! – கடல் ஆழ்த்தில் நடந்தது என்ன?

Titanic
100 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் சென்ற நபர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சுமார் 110 ஆண்டுகளுக்கும் முன்பு 1912ம் ஆண்டில் இங்கிலாந்தின் சௌத்தாம்டன் நகர துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 2,208 பயணிகளுடன் புறப்பட்டது பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல். வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது டைட்டானிக்.

இந்த கதையை மையப்படுத்தி ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் திரைப்படம் உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. அது முதல் இந்த டைட்டானிக் கப்பல் மீது பலருக்கும் அதை நேரில் பார்க்க ஆர்வம் இருந்து வருகிறது.

தற்போது அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை காண 5 பேர் கொண்ட குழு Ocean Gate Titan என்ற நீர்மூழ்கி கப்பலில் சென்றனர். 5 பேர் மட்டுமே செல்லக்கூடிய பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இந்த நீர்மூழ்கி தற்போது கடலுக்கு அடியில் மாயமாகியுள்ளது.

Titanic


இந்த நீர்மூழ்கியில் பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் தொழிலதிபர் ஷஹாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் உள்ளிட்ட முக்கிய செல்வந்தர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பயணித்த ஒவ்வொருவரும் டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுமார் 2,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்) செலவு செய்து இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 96 மணி நேரம் வரை இந்த நீர்மூழ்கியில் உள்ளவர்கள் கடலுக்கடியில் சுவாசிக்க முடியும். ஆனால் நீர்மூழ்கி கடலில் இறங்கிய 1 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு பிறகு நீர்மூழ்கி சிக்னலை இழந்துள்ளது. காணாமல் போன நீர்மூழ்கியில் உள்ளவர்களை உயிருடன் மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

110 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பலை தேடி போனவர்கள் மர்மமான முறையில் மாயமாகியுள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.