தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2000ஐ நெருங்கி வருவதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தாய்லாந்து, மியான்மர் நாடுகளை அடுத்து இந்தோனேசியாவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு உள்ள மக்கள் பீதியடைந்து, வீட்டை விட்டு அலறியடித்து ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ராவில் இன்று காலை 8:28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 புள்ளியாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் உணர்ந்தவுடன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும், மியான்மரில் நடந்த நிலநடுக்கத்தை கேள்விப்பட்ட இந்தோனேசியா மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் எந்தவிதமான பெரிய அளவிலான சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva