நடுவானில் தத்தளித்த விமானம்: விமானியின் திறமையால் தப்பித்த பயணிகள்!
மியான்மரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பக்க சக்கரங்கள் இல்லாமலே விமானம் ஒன்று தரையிறங்கியது.
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான UB-103 என்ற விமானம் 82 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் புறப்பட்டு மியான்மரின் பிரபல சுற்றுலா நகரான மாண்டலேவை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.
விமானதளத்தில் விமானத்தை தரையிரக்க முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக முன்பக்க சக்கரங்கள் வெளியேறவில்லை என்பதை விமானி உணர்ந்தார். இதனால் உடனே தரையிறங்காமல் விமானம் தொடர்ந்து இரண்டு முறை வானத்திலே வட்ட மடித்தபடியே இருந்தது.
விமானி யீ டுட் ஆங் இதுபற்றி விமான தளத்திற்கு தகவல் அளித்தவுடன் அவர்கள் வேறுவழி இல்லாததால் பின்பக்க சக்கரத்தை கொண்டே விமானத்தை தரையிறக்கும்படி அவருக்கு அனுமதி வழங்கினார்கள். விமானியின் அசாத்திய முயற்சியால் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டதுடன், அதில் பயணித்த அனைத்து பயணிகளும் எந்தவிதமான காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
அதிகாரிகளும், பயணிகளும் விமானியின் சாதுர்யத்தை பாராட்டினார்கள். இந்த வாரத்தில் மியான்மரில் விமான விபத்து ஏற்படவிருந்தது இது இரண்டாவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.