செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (19:33 IST)

மியான்மர் சிறையில் இருந்து ராய்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் விடுதலை

மியான்மரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர்களான வா லோன் மற்றும் யாவ் சோ ஓ இருவரும் அதிபரின் பொது மன்னிப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் அலுவல் ரகசிய சட்டத்தை மீறியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
 
2017ம் ஆண்டு நடத்திய ராணுவ நடவடிக்கையின்போது 10 முஸ்லிம் ரோஹிஞ்சாக்களை மியான்மர் பாதுகாப்பு படைப்பிரிவுகள் கொலை செய்ததாக செய்தி வெளியிட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
அவர்களை சிறையில் அடைத்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானதுடன், மியான்மரின் ஊடக சுதந்திரத்திற்கு கேடு விளைவிக்கின்ற செயல்பாடு என்று கூறப்பட்டது.
 
மியான்மரின் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பிற கைதிகளோடு இந்த இரு பத்திரிகையாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
"தான் பத்திரிகையாளராக பணிபுரிவதை நிறுத்த போவதில்லை" என்று சிறையை விட்டு யங்கூனின் புறநகருக்கு புறப்படுகையில் வா லோன் பிபிசியிடம் தெரிவித்தார்.