ஒளிரும் வியாழன்.. இதுவரை இப்படி பாத்ததே இல்ல! – நாசா வெளியிட்ட புகைப்படம்!
நாசா சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பிய ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட வியாழனின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகி வைரலாகி உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளியில் உள்ள பிற பால்வெளி அண்டங்கள், பெரிய நட்சத்திரங்கள், நெபுலா உள்ளிட்டவற்றை ஆராய ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை சமீபத்தில் விண்வெளிக்கு அனுப்பியது.
விண்வெளி சென்ற ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் இதுவரை மனித இனம் காணாத பல கேலக்சிகளையும், கோள்கள், நெபுலா உள்ளிட்டவற்றையும் படம் பிடித்து அனுப்பியது. முதன்முறையாக சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை ஜேம்ஸ்வெப் படம் பிடித்துள்ளது.
இதற்கு முன் ஹபிள் உள்ளிட்ட தொலைநோக்கிகள் வியாழனை படம்பிடித்திருந்தாலும், ஜேம்ஸ்வெப்பின் அகசிவப்பு கதிர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வியாழன் குறித்த மேலதிக துல்லியங்களை நமக்கு காட்டுகிறது. பூமியில் வட மற்றும் தென் துருவங்களில் ஏற்படும் அரோரா நிற மாலையை போன்றே வியாழனின் இரு துருவங்களிலும் ஏற்படுவதை இந்த படம் துல்லியமாக காட்டுகிறது.
மேலும் வியாழனின் நிலவுகளான அமெல்தியா (Amalthea) மற்றும் அட்ராஸ்டியா (Adrastea) ஆகியவையும் அட்ராஸ்டியாவின் வளையங்களையும் இந்த படம் துல்லியமாக காட்டுகிறது. வளையம் போல காணப்படும் இந்த பகுதி வியாழனை சுற்றி வரும் விண்கற்களால் உருவான மெல்லிய வளையம் போன்ற அமைப்பாகும். இதுதவிர வட மற்றும் தென் துருவங்களில் ஏற்படும் அரோராவால் வியாழனை தாண்டி வெளிப்படும் அரோரோ ஒளிச்சிதறலையும், பிண்ணனியில் சில பால்வெளிகளையும் கூட இந்த படம் துல்லியமாக காட்டுகிறது.