வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (08:13 IST)

விரைவில் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் குரங்கம்மை பரவும் அபாயம்? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Monkey Pox

ஆப்பிரிக்காவில் குரங்கம்மை தொற்று பாதிப்பால் ஏராளமானோர் பலியாகி வரும் நிலையில் விரைவில் இது ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களிலும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

 

 

அம்மை வகை தொற்று நோய்களில் ஒன்றான குரங்கம்மை நோயின் பாதிப்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 13 நாடுகளில் குழந்தைகள், முதியவர்கள் என பலருக்கும் குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 524 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

இது தொற்றி பரவும் வகை நோய் என்பதால் ஆப்பிரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தும் உள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் “இந்த வைரஸ் ஆப்பிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் பெற்றதாக உள்ளது அதிக வருத்தத்திற்கு உரியது” என்று கூறியுள்ளார்.
 

 

குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரக்கால நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்கா கண்டத்தை தாண்டி முதன்முறையாக ஸ்வீடனில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இது ஐரோப்பா நாடுகளில் பரவுவதற்கான சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

 

தொடர்ந்து ஆசிய கண்டத்திலும் பரவல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கருதப்படும் நிலையில் இந்திய அரசு மாநில அரசுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K