1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (15:08 IST)

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதா? இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் சந்தேகம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீன உயிரியல் ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் என்ற இஸ்ரேல் உயிரியல் நிபுணரின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 பேர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் இறந்தவர்களில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பாம்பு மூலமாக இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக சீன மருத்துவ ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த வைரஸின் தாக்கம் பரவியுள்ள நிலையில் இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் டேனி ஷோஹாம் இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். சீனாவில் அபாயகரமான வைரஸ்கள் குறித்து ஆய்வு செய்யும் மிகப்பெரும் ஆய்வகம் வுகானில்தான் உள்ளது. அந்த வுகானிலிருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் அணு ஆயுதங்களை சோதித்து பார்த்து வரும் அளவுக்கு நாட்டு மக்களை மறைமுகமாய் கொன்று குவித்துவிடக்கூடிய வைரஸ்கள் குறித்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் போர் நிபுணர் இப்படி சந்தேகம் எழுப்பியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியபோது அந்த ஆய்வகத்தில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளில் பல சீன ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது, என்றாலும் சீனா உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.