திடீரென வெடித்த எரிமலை; ஒட்டு மொத்தமாய் மூழ்கிய தீவு!
பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான டோங்காவில் எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட சுனாமியால் ஒரு முழு தீவே கடலில் மூழ்கியுள்ளது.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான டோங்காவை சுற்றி பல குட்டி தீவுகள் உள்ளன. இந்நிலையில் குட்டி தீவுகளில் ஒன்றான ஹூங்கா டோங்காவில் கடந்த 15ம் தேதி திடீரென எரிமலை வெடித்தது. இதனால் ஏற்பட்ட 15 மீட்டர் உயர சுனாமி அலைகள் சுற்றி இருந்த தீவுகளை தாக்கியது.
இதனால் மாங்கோ தீவு, ப்னோய்புவா தீவு, நமுகா தீவு உள்ளிட்ட பல தீவுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. 50 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட மாங்கோ தீவு முற்றிலும் தரமட்டமாகி கடல் நீரில் மூழ்கியுள்ளது. இந்த பெரும் சுனாமியால் தீவு நாடுகளுடனான உலக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையான பாதிப்பு விவரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.