புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 31 மே 2021 (15:17 IST)

சீனாவில் தம்பதி மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அரசு அனுமதி

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு இந்த கொள்கை மாற்றத்துக்கு அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் மக்கள்தொகை பெருக்கம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது.
 
அந்த தரவு ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசு அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதாவது, சீனாவில் குழந்தைகளின் பிறப்பு குறைவதால், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகமாகும் கவலை எழுந்தது.
 
இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடுமுழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.