குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்த 10ஆம் வகுப்பு மாணவி.. பரிதாப பலி..!
பீகார் மாநிலத்தில் உள்ள மாடி வீட்டில் நின்று கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவியை குரங்கு தள்ளிவிட்டதை அடுத்து அந்த மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் என்ற மாவட்டத்தில் வசித்து வந்த பிரியா குமாரி என்ற மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் மாடியில் அமர்ந்து தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது வீட்டிற்கு வந்த குரங்குகள் கூட்டம் அவரைச் சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா குரங்குகளிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்தார்.
அப்போது ஒரு குரங்கு அவரை பிடித்து இழுத்தது. இதனால் பிரியா அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து குரங்குகளை விரட்ட முயற்சித்தனர். இதனை அடுத்து மாடிப்படி அருகே பிரியா சென்றபோது ஒரு குரங்கு மாணவியின் மீது ஏறி அவரை மாடியிலிருந்து கீழே தள்ளியது.
இதனால் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவிக்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து சேரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றாலும், அந்த பகுதியில் உள்ள குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
Edited by Siva