ஏ.ஐ. தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது..! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு..!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும் என்றும் அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது என்றும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றார். போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.
போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் இத்தாலி நாட்டின் அபுலியாவில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக கூறினார்.
தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக அது இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும் என்று கூறிய மோடி, அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.
ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி செல்பி எடுத்துக் கொண்டார். இருவரும் சிரித்தவாரே போஸ் கொடுத்தனர். இதற்கு முன்னர் துபாயில் நடந்த பருவநிலை மாநாட்டின் போது இரு தலைவர்களும் எடுத்துக் கொண்ட செல்பி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட, பிரதமர் மோடி, இத்தாலியில் இருந்து இன்று நாடு திரும்பினார்.