எனது சாதனைகளை வெளியிட விடாமல் தடுக்கிறது தமிழக அரசு..! பிரதமர் மோடி பரபரப்பு புகார்..!!
எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சுமார் 17,300 கோடி கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது தெரிவித்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பெருமிதமாக கூறினார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது என்று குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.