ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (09:20 IST)

காதலை ஏற்க மறுத்த குடும்பம்; 13 பேரையும் விஷம் வைத்து கொன்ற பெண்! - சிக்கியது எப்படி?

காதலை ஏற்க மறுத்த 13 குடும்ப உறுப்பினர்களையும் இளம்பெண் ஒருவர் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் பகுதியில் உள்ள புரோகி என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்துள்ளது.

 

சில மாதங்களுக்கு முன்னதாக குடும்பத்தாரிடம் தனது காதல் குறித்து தெரிவித்த இளம்பெண் திருமணத்திற்க்கு சம்மதம் கோரியுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தார் இளம்பெண்ணின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்தோருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளனர். ஆனால் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி 13 பேருமே உயிரிழந்துள்ளனர்.
 

 

இளம்பெண் தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த சம்பவத்தில், பிரேத பரிசோதனையில் அவர்கள் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் இளம்பெண் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரை தீர விசாரித்தனர்.

 

அப்போது குடும்பம் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தி மாவில் விஷத்தை கலந்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். காதல் விவகாரத்தில் சொந்த குடும்பத்தார் 13 பேரையும் இளம்பெண் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K