பாகிஸ்தானுக்கு கம்பீர் போன்ற கண்டிப்பான பயிற்சியாளர்தான் தேவை… முன்னாள் வீரர் ஆசை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தங்களின் மோசமான காலகட்டத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன்சி குழப்பம், பாபர் ஆசாமின் மோசமான பேட்டிங் ஃபார்ம் மற்றும் அணிக்குள் நடக்கும் உள் அரசியல் என கடினகாலத்தில் உள்ளது.
அந்த அணியின் டி 20 பயிற்சியாளராக மட்டும் செயல்பட்ட கேரி கிரிஸ்டன் கூட அணிக்குள் பல முகாம்கள் உள்ளன, வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் அணிக்கு தேவை இந்தியாவின் கம்பீர் போன்ற கண்டிப்பான ஒரு பயிற்சியாளர்தான் என டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். மேலும் “அவரைப் போன்ற ஒருவரால்தான் அணிக்குள் நேர்மறையான அணுகுமுறையை உருவாக்க முடியும். அந்த அணுகுமுறைதான் இப்போது பாகிஸ்தானிடம் இல்லை” எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியதில்லை என்பது போன்ற அதிர்ச்சிகரமான கருத்துகளை எல்லாம் சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.