சுவையான காளான் குழம்பு செய்ய !!
தேவையான பொருள்கள்:
காளான் - கால் கிலோ
தக்காளி - 1
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகாய் வத்தல் - 2
கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிது
இஞ்சி - 1 இன்ச் அளவு
பூண்டு பல் - 3
அரைக்க -
தேங்காய் துருவல் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 6
தாளிக்க தேவையான பொருள்கள்:
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு
கிராம்பு - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
செய்முறை:
முதலில் காளானை நன்றாக கழுவி நீள வாக்கில் வெட்டி வைக்கவும். வெங்காயம், தக்காளியையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் மல்லித்தழையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
தேங்காய், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் காளான், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான காளான் குழம்பு தயார்.