வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சிறுதானியத்தில் செய்யப்படும் உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்...!

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் பல உணவுகளைத் தயாரிக்கலாம்.

 
சிறுதானிய கூழ்
 
குதிரைவாலி போன்ற ஏதோ ஒரு சிறுதானிய அவலை மிக்ஸியில் ரவை அளவுக்கு பொடித்துக்கொள்ளவும். 100 மி.லி தயிருக்கு  200 மி.லி தண்ணீர் என்கிற அளவில் ஊற்றி, மோராக அடிக்கவும். மோரில் 3  டீஸ்பூன் (சுமார் 30 கிராம்) அளவுக்கு சிறுதானிய  (பொடித்த) அவல் மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அத்தோடு, சிறிது உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.  வெய்யிலுக்கு இதமான பாரம்பர்ய கூழ் தயார். ஊறுகாய் அல்லது பொரித்த வற்றலுடன் பரிமாறலாம்.
 
சிறுதானிய அவல் பொங்கல்
 
ஒரு கப் அவலுக்கு கால் கப் பாசிப் பருப்பு என்ற அளவில் எடுத்து வேகவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய்  ஊற்றி,  சேது சங்கர்காய்ந்தவுடன் சிறிது மிளகைப் போடவும். மிளகு வெடித்து வரும்போது, சீரகம், பெருங்காயத் தூள்,  கறிவேப்பிலை, முந்திரி போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு வேகவைத்த  பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து,  ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அவலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி சூடாகப் பறிமாறவும். 
 
சிறுதானிய அவல் சப்பாத்தி
 
ஒன்றரை கப் சிறுதானிய அவலை எடுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கடலை  எண்ணெய், சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அவல் மாவைச் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப்  பிசைந்துகொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, பூரிக்குச் செய்வதுபோல் திரட்டி, எண்ணெயில் பொரித்து  எடுக்கவும். அல்லது சப்பாத்திபோல் தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.
 
சிறுதானிய அவல் உப்புமா
 
ஒரு கப் அவலுக்கு அரை கப் தண்ணீர் என்ற அளவில் எடுத்து அவலில் தெளித்து இரண்டு நிமிடங்கள் ஊறவைக்கவும்.  வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சீரகம் போடவும். அதைத் தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். பிறகு ஊறவைத்த அவலைச் சேர்க்கவும். பிறகு மஞ்சள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.  வாணலியை கீழே இறக்கி, வறுத்த வேர்க்கடலைப் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி போட்டுக் கிளறி, சூடாகப்  பரிமாறலாம்.