திங்கள், 24 மார்ச் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (09:28 IST)

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

Gold Medal oration

●      நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது நீரிழிவு ஆய்விற்கான ஆராய்ச்சி சங்கத்தால் (RSSDI) தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது; இந்தியாவில் நீரிழிவிற்கான பராமரிப்பில் நிலைமாற்றத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை திட்டங்களை இந்த அறிக்கை வலியுறுத்தியிருக்கிறது.

 

 

 

சென்னை, ராயபுரத்திலுள்ள எம்.வி டயாபடிஸ் மற்றும் புரொபசர் M. விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையத்தால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட 39-வது, புரொபசர் M. விஸ்வநாதன் தங்கப்பதக்க சிறப்பு பேருரையை இங்கிலாந்தின் NHS பவுண்டேஷன் டிரஸ்ட், டெர்பி மற்றும் பர்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மருத்துவ இயக்குநர் புரொபசர் டாக்டர். பிரான்சிஸ் கேம் வழங்கினார். உலகெங்கிலும், நிகழாமல் தடுக்கக்கூடிய உறுப்பு அகற்றலை தவிர்ப்பது மீதும், மற்றும் அதற்கான சமீபத்திய மருத்துவ சான்றுகள் குறித்தும் பயனுள்ள தகவல்களுடன் அவரது உரை அமைந்திருந்தது.

 

 

 

தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர். K. நாராயணசாமி, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னை ராயபுரத்திலுள்ள எம்.வி. டயாபடிஸ் மருத்துவமனை & புரொபசர் M. விஸ்வநாதன், நீரிழிவு ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், தலைமை மருத்துவருமான டாக்டர். விஜய் விஸ்வநாதன், மற்றும் அதன் டீன் டாக்டர். S. N. நரசிங்கன் மற்றும் இணை டீன் டாக்டர். ஜெயஶ்ரீ கோபால் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

 

 

 

நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது நீரிழிவு ஆய்விற்கான ஆராய்ச்சி சங்கத்தால் (RSSDI) தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளை அறிக்கை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது; இந்தியாவில் நீரிழிவிற்கான பராமரிப்பில் நிலைமாற்றத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கை திட்டங்களை இது வலியுறுத்தியிருக்கிறது. RSSDI என்பது, 23 கிளைகளுடன் 12,000 உறுப்பினர்களை உள்ளடக்கி நீரிழிவு சிகிச்சை பராமரிப்பு மீது தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற உலகின் மிகப்பெரிய அமைப்பாகும். இந்த அமைப்பின் தேசிய தலைவராக தற்போது டாக்டர். விஜய் விஸ்வநாதன் செயல்படுகிறார். 2025 மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை வடசென்னை, தென்சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் பாத மருத்துவத்தின் இரண்டாவது பள்ளி என்ற நிகழ்வையும் எம்.வி. டயாபடிஸ்  நடத்தியிருக்கிறது.

 

 

 

நீரிழிவு பாதம் மீதான சர்வதேச செயற்குழுவின் நடப்பு தலைவராகவும் பணியாற்றும் புரொபசர் டாக்டர். பிரான்சிஸ் கேம், நீரிழிவின் காரணமாக காலின் கீழ்ப்புற பகுதிகளை வெட்டி அகற்றுவதை தடுப்பது மீது அவரது உலகளாவிய நிபுணத்துவ கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நீரிழிவு தொடர்பான பாத சிக்கல்கள் என்ற பெரும் சுமையை குறைவான மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் சுமக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்; பாத பராமரிப்பு நடைமுறைகள் குறித்த குறைவான விழிப்புணர்வு மற்றும் பாத புண்களை சரிவர மேலாண்மை செய்ய தவறுவது ஆகியவையே பாதத்தை வெட்டியெடுக்கும் அவசியம் உருவாக பெரும்பாலும் காரணமாக இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இத்துறையில் முன்னணி நிபுணர்களால் உருவாக்கப்பட்டு உலகளவில் அங்கீகாரம் பெற்றிருக்கிற, நீரிழிவு பாத பராமரிப்பு மீது சான்று அடிப்படையிலான வழிகாட்டல்களையும் முன்னிலைப்படுத்தி தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

இந்தியாவில் நீரிழிவு சிகிச்சையில் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உயர்த்துவதில் இந்த சிறப்பு பேருரை நிகழ்வும் மற்றும் வெள்ளை அறிக்கை வெளியீடும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நிகழ்வாக அமைந்திருக்கின்றன என்று தனது உரையில் டாக்டர். விஜய் விஸ்வநாதன் குறிப்பிட்டார். அதிக விழிப்புணர்வும், முறையான பயிற்சியும் இணைந்து செயல்படும்போது அவசியமற்ற உறுப்பு அகற்றல்கள் பலவற்றை தடுக்க அது உதவும் என்று அவர் வலியுறுத்தினார். “மொத்த மக்கள் தொகையில் 10%-க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உலகின் நீரிழிவு தலைநகரம் என்ற வருத்தத்திற்குரிய பெயரை இந்தியா பெற்றிருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மதிப்பீடுகளின்படி இந்தியாவில் 101 மில்லியன் நபர்கள் நீரிழிவு பாதிப்போடு வாழ்கின்றனர். எனினும் நோய் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும், நோய் கண்டறியப்படாத மற்றொரு நபர் இருக்கிறார் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகளில் நீரிழிவு பாதிப்பு ஏறக்குறைய 15-18% என்ற அளவிலும், கிராமப்புற பகுதிகளில் 6-8% என்ற அளவிலும் இருப்பதாக அறியப்படுகிறது,” என்று டாக்டர். விஜய் விஸ்வநாதன் தெரிவித்தார்.

 

 

 

நீரிழிவு மேலாண்மைக்கு ஒரு முழுமையான, ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறைக்கு அவசரத்தேவை இருப்பதை டாக்டர். விஸ்வநாதன் வலியுறுத்தினார். இந்தியாவின் நீரிழிவு என்ற பெரும் சுமையைக் கட்டுப்படுத்தவும் மற்றும் சுகாதார ஆதாரவளங்கள் மீது மேலதிக அழுத்தம் விழாமல் தடுக்கவும், அரசாங்கம், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமூகத்தினர் ஆகியோரை உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்ட இடையீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

 

 

 

பல்வேறு துறைகளில் இயங்கும் அக்கறை பங்காளர்கள் பலரையும் தீவிரமாக ஈடுபடச் செய்வதன் மூலம் நீரிழிவு சிகிச்சை பராமரிப்பில் ஒரு முழுமையான, ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை RSSDI அவசியமானதாக கருதுகிறது என்று டாக்டர். விஸ்வநாதன் கூறினார். அடுத்த உலக நீரிழிவு தினத்திற்குள் அடையப்படுவதற்கான அளவிடக்கூடிய இலக்குகளை நிர்ணயிப்பதில் உறுதி கொண்டிருக்கும் RSSDI, நீரிழிவு தடுப்பு, சிகிச்சை முறைகளை தவறாமல் கடைப்பிடித்தல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை விளைவுகள் ஆகியவற்றை இந்தியாவெங்கும் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த இலட்சியக் குறிக்கோளின் ஒரு பகுதியாக மருத்துவச் சேவை குறைவாக கிடைக்கப்பெறும் பகுதிகளைச் சென்றடைய நடமாடும் சுகாதார ஊர்திகள் மற்றும் டெலிமெடிசின் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் சிகிச்சைக்கான அணுகுவசதியை விரிவாக்குவது மீது RSSDI சிறப்பு கவனம் செலுத்துகிறது. ஆராய்ச்சி மற்றும் தரவு சேகரிப்பை மேம்படுத்துவதும் இதன் மற்றுமொரு முன்னுரிமை செயல்பாடாக இருக்கிறது. மாறுபட்ட பல்வேறு மக்கள் பிரிவினரில் நீரிழிவு பாதிப்பின் போக்குகள், சிகிச்சையின் பயனளிப்பு மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை விளைவுகள் ஆகியவை குறித்த புரிதலை மேம்படுத்த நீரிழிவு பதிவகம் ஒன்றை நிறுவவும் இது திட்டமிட்டிருக்கிறது.

 

 

 

70 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தைப் பெற்றிருக்கும் எம்வி டயாபடிஸ் மருத்துவமனை, நீரிழிவுக்கும் மற்றும் நீரிழிவின் காரணமாக ஏற்படும் பாத சிக்கல்களுக்கும் முழுமையான சிகிச்சை பராமரிப்பை வழங்கும் திறன் கொண்ட பிரத்யேக மருத்துவக் குழுவை உருவாக்கியிருக்கிறது. இம்மருத்துவமனையைச் சேர்ந்த பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்களின் நிபுணத்துவத்தைக் கொண்டு கால்களில் இரத்த சுழற்சியை மேம்படுத்துவது, தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் பாதத்தின் மீதான அழுத்தத்தை நீக்குவது ஆகிய நடவடிக்கைகள் மீது இம்மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில், பெரிய அளவிலான உறுப்புநீக்க நடவடிக்கைகளிலிருந்து 1,00,000-க்கும் அதிகமான நபர்களின் கால்களை இந்த நீரிழிவு சிகிச்சை மையம் வெற்றிகரமாக காப்பாற்றியிருக்கிறது.