இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, குழந்தைகளுக்கு இளவயதில் அதிக அளவில் இனிப்பான உணவுகளை வழங்குவது, அவர்கள் முழு வாழ்நாளிலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர்ந்து இனிப்பு உணவுகளை உண்பதன் மூலம் குழந்தைகளில் அதிக உடல் பருமன், இளவயதிலேயே ரத்த அழுத்தம் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
அமெரிக்காவில் குழந்தைகள் சராசரியாக தினமும் 17 தேக்கரண்டி அளவு சர்க்கரை உட்கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறுமிகளுக்கு அதிக அளவில் இனிப்பு உணவுகளை வழங்குவது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, முன்கூட்டியே பருவ மாற்றம் அடையும் நிலையை உருவாக்குகிறது.
மேலும், அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது கல்லீரல் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படுவதோடு, மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டு அறிவாற்றல் வளர்ச்சி குறைவது ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இனிப்பு என்றால் வெறும் சீனி மற்றும் சர்க்கரை மட்டும் அல்ல, பதப்படுத்தப்பட்ட தானியங்கள் முதல் பழச்சாறுகள் வரை பல்வேறு உணவுகளில் இருக்கிறது. எனவே, இந்த வகையான உணவுகளை குறைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலகளாவிய ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Edited by Mahendran