திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (09:07 IST)

முரளிதரன் பயோபிக் – வெளியேறுகிறாரா விஜய் சேதுபதி ?

முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்க இருக்கும் 800 படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார்களான தோனி, சச்சின் ஆகியோரின் படங்களை அடுத்து இப்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் உருவாக இருக்கிறது. அதில் முத்தையா முரளிதரனாக நடிக்க நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றதும் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். இந்தப்படத்துக்கு 800 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இதன் படப்பிடிப்பு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

முத்தையா முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சேவை ஆதரித்துப் பல கருத்துகளைக் கூறியுள்ளதாகவும் அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனவும் ஈழத்தமிழர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இந்தப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னமும் தயாரிப்பு நிறுவனமோ விஜய் சேதுபதியோ இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை.