என் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பாருங்க.. ஏன்னா?! – சிம்பு வெளியிட்ட அறிவிப்பு!
பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களுமே வெளியாகும் நிலையில் தனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தையும் பார்க்க வேண்டுமென சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிம்பு நடித்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஈஸ்வரன்”. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து ஈஸ்வரன் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதேசமயம் விஜய் நடித்து நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள மாஸ்டர் திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு “ஈஸ்வரன் படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடித்து பல பிரச்சினைகளுக்கு இடையே வெளியிடுவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையரங்குகள் மீள வேண்டும் என்பதற்காகதான். ஈஸ்வரன் வெளியாகும் அதே நாளில் நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ள விஜய் அண்ணனின் மாஸ்டர் படமும் வெளியாகிறது. அவர்கள் நினைத்திருந்தால் ஆன்லைனில் விற்று இருக்கலாம், ஆனால் திரையரங்குகள் நலன் கருதி திரையரங்கில் வெளியிடுகிறார்கள். எனவே எனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும். விஜய் அண்ணா ரசிகர்கள் எனது ஈஸ்வரன் படத்தை பார்க்க வேண்டும். அதுதான் திரையரங்குகளுக்கு செய்யும் உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.