ஒரே படத்தில் இணைந்த அட்லியின் இரண்டு எதிரிகள்: ஹீரோ ராகவா லாரன்ஸ்
அட்லி இயக்கிய ’மெர்சல்’ திரைப்படம் ’மூன்று முகம்’ படத்தின் காப்பி என்று குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளரும், அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என குற்றஞ்சாட்டிய உதவி இயக்குனரும் தற்போது ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மூன்று முகம்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் என்பவர் வாங்கி வைத்திருந்தார். ஆனால் அந்த படத்தைத்தான் உல்டா செய்து இயக்குனர் அட்லி, மெர்சல் என்ற திரைப்படத்தை எடுத்து விட்டதாக கதிரேசன் தரப்பினர் குற்றம் சாட்டினார்
இதேபோல் அட்லி இயக்கிய பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் செல்வம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பின்னர் சமரசம் பேசப்பட்டு இந்தப் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அட்லி மீது குற்றஞ்சாட்டிய தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் அட்லீ மீது குற்றஞ்சாட்டிய உதவி இயக்குநர் செல்வம் இயக்கும் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாம். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது