1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (14:40 IST)

96 பட நிறுவனத்தின் படங்களில் யாரும் நடிக்க கூடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படம்  வசூலில் பெரும் சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியில் '96' படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் '96' படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் படத்தில் நடித்தவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கவில்லை  என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக 
 
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், ‘வீர சிவாஜி’ படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும் இன்னும் சம்பள பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ‘96’ படத்தில் நடித்த விஜய் சேதுபதியும் சம்பள பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே படம் வெளியானது.
 
மேற்கண்டப் படங்களை வெளியிடும் கடைசி நேரத்தில், நடிகர்களின் சூழ்நிலையை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொடர்ந்து சம்பளம் வழங்காமல் படங்களை வெளியிட்டு வருகிறது. படம் வெளியீட்டின்போது இக்கட்டான சூழ்நிலையில் என்றுமே நடிகர்கள் தங்களின் சம்பளத்தை விட்டுக் கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர்.
 
ஆனால், அந்த நல்ல செயலைப் பலவீனமாக எடுத்துக் கொண்டு, சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒப்புக்கொண்ட சம்பளத்தைத் தரமறுப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.
 
கடந்த காலங்களில் இருந்தே பல நடிகர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது.
 
அதன் அடிப்படையில், இனிவரும் காலங்களில் இதுபோன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கும்/தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள், எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்படி, தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எந்த ஒரு நிகழ்வுக்கும் படங்களுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் எந்த ஒத்துழைப்பும் நல்க வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.