1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (12:51 IST)

ஊடகங்களுக்கு நடிகை நிவேதா பேத்ராஜ் எச்சரிக்கை

பாலிவுட் மாடல் ஒருவரின் பிகினி புகைப்படத்தை நடிகை நிவேதா பேத்துராஜின் பிகினி புகைப்படம் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த வதந்தி சமூக வலைத்தளங்களிலும் பரவி வைரலானது. இதுகுறித்து ஏற்கனவே நிவேதா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் ஒருசில ஊடகங்கள் அந்த புகைப்படத்தில் இருப்பது நிவேதாதான் என பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக தெரிகிறது
 
இந்த நிலையில் இந்த நிலை இனிமேலும் தொடர்ந்தால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று நடிகை நிவேதா பேத்ராஜ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
"கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் வேறு ஒரு நடிகையின் புகைப்படங்களை வெளியிட்டு அது நான் தான் என்று பொய் பரப்புரை செய்து வருகின்றனர். என் மேல் அக்கறை கொண்ட சிலர் தொடர்ந்து இதை பற்றிய கவனத்தை என்னிடம் கொண்டு வந்தனர். இந்த செயலை வெறும் கவன குறைவான செயலாக என்னால் பார்க்க முடியவில்லை. என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே யாரோ இவ்வாறு செய்கிறார்கள் என்று சந்தேக பட வேண்டி உள்ளது. 
 
இத்தகைய நிகழ்வுகள் என்னை மிகவும் காயப்படுத்தி உள்ளது. இதன் தொடர்பாக  நான் சட்ட ஆலோசனை செய்து தொடர்ந்து இவ்வாறு செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என முனைப்புடன் உள்ளேன்.ஊடகங்களின் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. அதனால் மட்டுமே இதுவரை அமைதியாக இருந்தேன்.ஆயினும் இந்த பிரச்சினை தொடருகிறது. ஒரு நடிகை என்றாலும் எங்களுக்கும் குடும்பம் உண்டு. எங்களை சார்ந்த, நாங்கள் சார்ந்த சமுதாயமும் எங்களுக்கும் உண்டு. 
 
இத்தகைய பொய் செய்திகள் எங்களுக்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது.இந்த  கடிதம் எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் வராமல் தடுக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து இவ்வாறு நிகழுமானால் சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு, என்று எனது சட்ட ஆலோசகர் கூறுவதை நான் ஏற்றுக கொள்வதை தவிர வேறு வழி இல்லை"என்று கூறினார்.
 
இவ்வாறு நிவேதா பேத்ராஜ் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.