வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (13:59 IST)

பிரசாத் ஸ்டுடியோவுக்குள் நுழையும் இளையராஜா! – நீதிமன்றம் உத்தரவு!

பிரசாத் ஸ்டுடியோ மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்றதால் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரசாத் ஸ்டுடியோவில் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து இளையராஜா வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது தனியாக ஒரு ஸ்டுடியோவை தனக்கென கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்யவும், தனது பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கவும் கோரி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை இளையராஜா திரும்ப பெற்றால் அனுமதிப்பதாக பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இளையராஜா தான் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றார். அதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிமன்றம் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் செல்ல அனுமதி அளித்தது.

ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்த தேதியில் செல்வது என்பதை இளையராஜாவும், பிரசாத் ஸ்டுடியோவும் பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், குறிப்பிட்ட நாளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவிற்குள் இருக்கலாம் என்றும், அந்த சமயம் தியானம் செய்தல் மற்றும் தனது பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.