ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமாருக்குப் பதில் இணையும் பிரபலம்!
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
முதல் பாகத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷ்ராஃப் போன்றவர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சிவராஜ் குமாருக்குப் பதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவராஜ்குமார் புற்றுநோய்க் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.