ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!
நடிகை சோனா, தனது வெப் தொடருக்கான ஹார்ட் டிஸ்கை திருப்பிப் பெற வேண்டுமெனக் கோரி, பெப்சி யூனியன் அலுவலகத்தின் முன் ஒரு நாள் போராட்டம் நடத்தினார். இப்போது, இந்த விவகாரம் முடிவுக்கு வந்து அவரது கைக்கு ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோனா தயாரித்த 'ஸ்மோக்' என்ற வெப் தொடரின் ஹார்ட் டிஸ்கை, அவரது மேலாளர் கைப்பற்றியதாகவும், அதை திருப்பி தருவதற்கு பணம் கேட்டதாகவும், அவர் புகார் தெரிவித்தார். இதனால், திடீரென பெப்சி அலுவலகத்துக்கு முன்பு அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தைப் பற்றிய அவரது கருத்துகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டன.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சமரசம் செய்து, அவருடைய ஹார்ட் டிஸ்கை மீண்டும் சோனாவிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்து நடிகை சோனா, நடிகர் சங்கத்துக்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார். "எனக்காக யாரும் உதவி செய்ய முன்வராத சூழலில், நடிகர் சங்கம் தலையிட்டு என் பிரச்சனையை தீர்த்தது, மிகுந்த நன்றி," என அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, 'ஸ்மோக்' வெப் தொடர் விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்த இந்த பிரச்சனை, ஒரே ஒரு நாள் போராட்டத்தால் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva