புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (16:32 IST)

ஹிட் அடித்த இயக்குனருடன் செட்டான தயாரிப்பாளர்!

விமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக ரீதியிலான வெற்றியும் எப்போதாவதுதான் ஒரு படத்தில் தான் இணையும். அவ்வாறு இணைந்து விமர்சகர்களையும், வெகுஜன ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது என்பது ஒரு திரைப்படத்துக்கு கடினமான செயல்தான். ஆனால், அதை எளிமையான விஷயம் போல் கையில் எடுக்கும் அத்தனை படத்தையும் வெற்றிப்படங்களாக வித்திடுபவர் இயக்குனர் வெற்றிமாறன். 


 
அண்மையில் அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த "அசுரன்" திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலில் வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கு அடிக்கல் போடுகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் வணிக ரீதியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் எல்ரெட் குமார் முதல் முறையாக வெற்றிமாறனுடன் ஒன்றிணைகிறார்கள்.
 
இது குறித்து பேசிய எல்ரெட் குமார் , ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர்.
 
அவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.


 
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம் என கூறினார். தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறனும், வணிக ரீதியில் வெற்றிப் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் முதல் முறையாக ஒன்றிணைந்துள்ள இப்படம் மீண்டும் ஒரு தேசிய விருதை அடையுமா என பிருதிருந்து பார்ப்போம்.