சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய மம்தா மோகன்தாஸ் – புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பு!
நடிகை மம்தா மோகன்தாஸ் தனது பெயரில் புதிதாக திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
மாயோகம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதற்கு பிறகு விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிப்பையும் தாண்டி மலையாளம் மற்றும் தமிழில் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக சிம்பு நடித்த காளை படத்தில் காள காள என்ற பாடலையும் விஜய் நடித்த வில்லு படத்தில் டாடி மம்மி பாடலையும் இவர் தான் பாடினார்.
இருந்தாலும் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதற்கிடையில் இவருக்கு 2011 ஆம் ஆண்டு ப்ரஜித் பத்மநாபன் என்பவருடன் திருமணம் நடந்தது . ஆனால் அந்த மணவாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை காரணம் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை விவாகரத்து செய்துவிட்டார் ப்ரஜித் . இப்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளார் மம்தா.
இந்நிலையில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். தனது நிறுவனத்தில் திறமையான புதுமுகக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதமே இந்த நிறுவனத்தை அவர் தொடங்க நினைத்ததாகவும் ஆனால் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.