1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (18:42 IST)

சிங்கத்துக்குப் பதில் உதயநிதியை தேர்வு செய்தாரா பிரபு சாலமன்?

கயல் படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன் அப்படத்துக்குப்பின் உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் கூறுகின்றது.

சுனாமியையும் அதன் பாதிப்புகளையும் மையப்படுத்தி கயல் படம் உருவாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சிங்கத்தை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருப்பதாக பிரபு சாலமன் கூறியிருந்தார். சிங்கத்தை - ஆங் லீயின் லைஃப் ஆஃப் பை படத்தில் வரும் புலியைப் போல் கிராபிக்ஸில் உருவாக்குவதுதான் சாலமனின் திட்டம். கயல் படத்தின் சுனாமி காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கிவரும் நிறுவனத்திடமே கிராபிக்ஸ் சிங்கத்தை உருவாக்கும் பணியை ஒப்படைத்திருப்பதாகவும், அது திருப்திகரமாக வந்தால் சிங்கத்தை மையப்படுத்திய தனது கனவுப் படத்தை தொடங்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன.
 
நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்து திருக்குமரன் இயக்கத்தில் கெத்து படத்திலும், அகமது இயக்கத்தில் இதயம் முரளி படத்திலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.