1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

இப்படி ஒரு சுவையில் அதிரசம் சாப்பிட்டு பாருங்க !!

தேவையான பொருட்கள்:
 
அரிசி - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சுக்கு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை :
 
பச்சரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து நீரை நன்கு வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி விடவும். அதிக நேரம் காயக் கூடாது. சற்று ஈரமாக உள்ள போதே பச்சரிசியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும்.
 
வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லப்பாகினை பதம் வரும் வரை கொதிக்க விடவும். (கையில் எடுத்து தொட்டால் பிசுபிசுப்பாக இருக்கும்) பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும்.
 
பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். ஆறிய பின் காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இந்த மாவு 10 முதல் 15 நாட்கள் வரை கெடாது. தேவைப்படும் போது அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து, எண்ணெயை ஒரு பேப்பரில் உறிஞ்சி எடுக்கவும். சுவையான இனிப்பு அதிரசம் தயார்.
 
குறிப்பு:
 
மாவு கிளறியவுடன் அதிரசம் சுடுவதை விட இரண்டு நாட்கள் கழித்து அதிரசம் செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.