இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக தமிழக கிரிக்கெட் வீரர்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதியப் பயிற்சியாளராக தமிழகததைச் சேர்ந்த டபிள்யு வி ராமனை நியமித்துள்ளது பிசிசிஐ.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் மற்றும் இந்தியாவின் நட்சத்திர வீரங்கனை மிதாலி ராஜ் ஆகியோருக்கு இடையில் பிரச்சனை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சனையில் அணியின் பயிற்சியாளரான ரமேஷ் பவாருக்கும் பங்குண்டு என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திடரின் பாதியிலேயே நல்ல ஆட்டத்திறனில் இருந்த மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டார். இந்திய அணியும் பாதியிலேயே தோற்று தொடரை இழந்தது.
இதையடுத்து மிதாலி ராஜ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பயிற்சியாளர் ரமேஷ் பவார் ஆகியோர் மீது புகார் கூறினார். இதனையடுத்து பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க பயிற்சியாளர் பதவியில் இருந்து ரமேஷ் பவார் பிசிசிஐயால் நீக்கப்பட்டார். ஆனால் பவாருக்கு ஆதரவாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் துணைக்கேப்டன் மந்தனா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதினர்.
சில வாரங்களுக்கு முன்னர் பிசிசிஐ இந்திய மகளிர் அணிக்கு புதியப் பயிற்சியாளரைத் தேடும் படலததைத் தொடங்கியது. அதற்கு ரமேஷ் பவார் விண்ணப்பித்தார். ஆனால் அவரைக் கண்டுகொள்ளாத பிசிசிஐ இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை அனுகியது. ஆனால் அவர் ஐபில் தொடரில் பெங்களூர் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற முடியாது என அறிவித்துள்ளார்.
அதனால் புதியப் பயிற்சியாளராக தமிழ்கத்தைச் சேர்ந்த டபிள்யு வி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமன், இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 23 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய அணிகளுக்கு ரஞ்சிப் போட்டிகளின் போது பயிற்சியாளராகவும், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்குப் பயிற்சியாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.