புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (07:22 IST)

இன்றுமுதல் டி.என்.பி.எல் திருவிழா! முதல் போட்டியில் மோதுவது யார் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போல் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நான்காவது ஆண்டாக இன்று தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது 
 
திண்டுக்கல் அணியின் கேப்டனாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்த அஸ்வின் பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த சீசனில் திண்டுக்கல் அணிக்கு ஜெகதீசன் என்ற வீரர் கேப்டனாக இருந்த நிலையில் இந்த முறை அஸ்வின் கேப்டன் பதவியை ஏற்று உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் அனுபவம் வாய்ந்த கணேஷ், விவேக் உள்ளிட்டோரும் இந்த அணியில் இருப்பதால் இந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சேப்பாக்கம் கடந்த 2017ஆம் ஆண்டு கோப்பையை வென்ற அணி ஆகும். இந்த அணியின் முன்னணி வீரர் விஜயசங்கர் காயத்தால் அவதிப்பட்டு உள்ளதால் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. கவுஷின் காந்தி இந்த அணியின் கேப்டனாக இருக்கிறார்.
 
டிஎன்பிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் ஒரு கோடி பரிசும் இரண்டாவதாக வரும் அணிக்கு ரூபாய் 60 லட்சமும் மூன்றாவதாக வரும் அணிக்கு 40 லட்சமும் பரிசு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் டிஎன்பிஎல் முதல் போட்டியை தொடங்கி வைக்க இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேதார் ஜாதவ் திண்டுக்கல் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது