வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பதற்கு இந்தியாதான் காரணமா ? – இலங்கை அமைச்சர் பதில் !
இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பதற்கு இந்தியா எந்த விதத்திலும் காரணம் இல்லை என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்கள் மேல் தாக்குதல் நடைபெற்றது. இதில் 7 பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகினர். வீரர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பின் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன் வரவில்லை.
இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டு அதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என அறிவித்து 10 இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
லசித் மலிங்கா, நிரோஷன் டிக்வெலா, குஷான் ஜெனித் பெரேரா, தனஞ்சயா டி சில்வா, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா, ஏஞ்சலோ மேத்யூஸ், சாரங்கா லக்மால், தினேஷ் சண்டிமால், மற்றும் திமுத் கருணா ரத்னே ஆகிய 10 வீரர்கள் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் தொடர் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி ட்விட்டரில் ‘பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யாவிட்டால் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள். விளையாட்டில் இருந்து விண்வெளி இந்த மூர்க்கமான வேலையை இந்தியா செய்து வருகிறது. இந்திய விளையாட்டுத் துறையின் சில அதிகாரிகள் செயல் மலிவாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மறுத்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் ‘வீரர்கள் விலகலுக்கு இந்தியா எந்த விதத்திலும் பொறுப்பில்லை. அப்படி குற்றம் சாட்டுவதில் துளி கூட உண்மையில்லை. 2009-ம் ஆண்டு தாக்குதலால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே வீரர்கள் விளையாடத் தயங்குகிறார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு வர விரும்பும் வீரர்களைக் கொண்டே அணியை உருவாக்கியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.