தோனியே இருக்கும்போது என் புருசன் ஏன் போகணும்? கடுப்பான பாகிஸ்தான் கேப்டன் மனைவி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது நீக்கம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் அவரது மனைவி.
பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சமீபத்தில் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 20 ஓவர் போட்டிக்கு பாபர் ஆசமும், டெஸ்ட் தொடருக்கு அசார் அலியும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சர்ப்ராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணிப்பதாகவும், இதனால் அகமது விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பார் எனவும் செய்திகள் கசிய தொடங்கின.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சர்ப்ராஸின் மனைவி குஷ்பாத் ”என் கணவர் கிரிக்கெட்டிலிருந்து ஏன் ஓய்வு பெற வேண்டும்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. ஆனால் தோனிக்கு எவ்வளவு வயது ஆகிறது தெரியுமா? அவரே இன்னும் கிரிக்கெட்டில் இருக்கும்போது என் கணவர் எதற்காக விலக வேண்டும்?” என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை 3 நாட்களுக்கு முன்பே எங்களுக்கு தெரியப்படுத்தியது. இதனால் என் கணவர் வருத்தம் அடையவோ, நம்பிக்கை இழக்கவோ இல்லை. இனிமேல் எந்தவிதமான சுமையும் இன்றி சுதந்திரமாக அவர் விளையாடுவார்” என தெரிவித்துள்ளார்.