இந்திய வீரர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சோதனை – நடாவிடம் பணிந்தது பிசிசிஐ !
இந்திய வீரர்களுக்கான ஊக்கமருந்து சோதனைகளை இதுவரை ஸ்வீடன் நாட்டு நிறுவனம் நடத்தி வந்த நிலையில் இனி தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அதை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச ஊக்கமருந்து சோதனை மேலாண்மை நிறுவனம்தான் இதுவரை இந்தியக் கிரிக்கெட் வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிறுவனம் பிசிசிஐ- ஆல் நியமிக்கப்பட்ட நிறுவனம். இனிமேல் இந்த நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ளாது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் எனப்படும் ’நடா’ அந்தபணியைச் செய்யும் என விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது. இதை நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு விளையாட்டுத்துறை செயலாளர் ஜூலனியா உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் ’ இனிமேல் அந்தபரிசோதனைகள் அனைத்தும் நாடா பரிசோதனை செய்யும். இது சம்மந்தமாக பிசிசிஐ யிடம் அறிவிக்கப்பட்டு விட்டது. இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர பிசிசிஐக்கு வேறு வழியில்லை. இனிமேல், இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ’நடா’ ஊக்கமருந்து சோதனை செய்யும். வீரர்களிடம் இருந்து சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை வாங்கி நன்கு பயிற்சி எடுத்த, தேர்ந்த அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்வர். சோதனை முடிவுகள் 90 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். இந்த விஷயங்கள் அனைத்தையும் பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.