ஆதாயம் தரும் இரட்டைப் பதவி – ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ !

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:02 IST)
ஆதாயம் தரும் இரட்டைப் பதவிகளில் இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் டிராவிட்டுக்கு பிசிசிஐ யின் ஒழுங்குமுறை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கிரிக்கெட் உலகின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராகவும். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இரட்டைப் பதவிகளில் இருந்து வருகிறார். இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினை நடத்துகிறது. ஆகவே இரட்டைப் பதவிகளில் இருப்பது பிசிசிஐ விதிமுறைப்படி தவறு எனக் கூறி மத்தியப் பிரதேச கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய் குப்தா என்பவர் பிசிசிஐ – யிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ ஒழுங்குநெறி அதிகாரி டி.கே.ஜெயின் டிராவிட்டுக்கு இரண்டு வார்ங்களுக்குள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்தியாவின் கண்ணியமிக்க முன்னாள் வீரர்களில் ஒருவரான டிராவிட்டை இழிவு செய்யும் விதமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அவருக்கு ஆதரவாக பிசிசிஐக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாகவே இதுபோல முன்னாள் வீரர்களான சச்சின், லக்‌ஷ்மன் மற்றும் கங்குலி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :