சதமடித்த ரன் மெஷின் – சரிவில் இருந்து மீண்ட இந்தியா !
இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னின்ஸில் ஹாரிஸ், ஹெட், பிஞ்ச் ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 326 ரன்களைக் குவித்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்துக் களமிறங்கிய இந்திய ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 2 ரன்களிலும் வெளியேற. புஜாராவோடு கோஹ்லி சேர்ந்தார். இருவரும் ஆமை வேகத்தில் விளையாட 20 ஓவர்களில் வெறும் 23 ரன்களே சேர்த்தனர். அதன் பின்னர் கொஞ்சம் வேகம் காட்டிய கோஹ்லி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் புஜாரா ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழக்க களமிறங்கினார் ரஹானே.
கோஹ்லி நிதானம் காட்ட அதிரடியில் புகுந்தார் ரஹானே. இருவரும் சிறப்பாக விளையாட ரன்கள் சீராக உயர்ந்தது. 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. அதைத் தொடர்ந்து இன்று களமிறங்கிய இந்தியாவில் ரஹானே 51 ரன்களில் டிம் லியன் பந்தில் ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரியோடு கைகோர்த்த கோஹ்லி சிறப்பாக விளையாடி தனது 25 வது சதத்தை நிறைவு செய்தார்.
சற்று முன்பு வரை இந்திய அணிய் 223 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்துள்ளது. விராட் கோஹ்லி 112 ரன்களுடனும் விஹாரி 20 ரன்களோடும் களத்தில் விளையாடி வருகின்றனர்.